Tuesday, March 21, 2017

மன அமைதி அடைய சுலபமான வழி

ஒரு நாள் புத்தரும் அவருடைய சீடர்களும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
போற வழியில் ஒரு ஏரி இருந்தது. புத்தருக்கு தாகமாய் இருந்ததால் தன் சீடர் ஒருவரை
ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வர சொன்னார்.

அந்த நேரத்தில் ஒரு மாட்டு வண்டி அந்த ஏரியை கடந்து சென்றதால், தண்ணீர் சேறும் சகதியுமாய் ஆனது.
கலங்கலாய் இருந்தது.
“இந்த தண்ணீரை எப்படி குருவுக்கு கொடுக்க முடியும்” என்று அந்த சீடர் யோசனை செய்தார்.
பின்னர் புத்தரிடம் வந்து, “தண்ணீர் சேறாக இருக்கிறது. அதை குடிக்க முடியாது” என்று கூறினார்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு, புத்தர் அதே சீடரை ஏரிக்கு சென்று தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார்.
சீடர் தண்ணீர் எடுக்க ஏரிக்கு வந்தார். தண்ணீர் எடுக்காமல் திரும்பி வந்து விட்டார்.
”தண்ணீர் இன்னமும் சேறாய் தான் இருக்கிறது” என்று அந்த சீடர் புத்தரிடம் கூறினார்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு, புத்தர் மீண்டும் அந்த சீடரை ஏரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த முறை தண்ணீரில் இருந்த சேறு சகதி அடியில் சென்று விட்டதால், தண்ணீர் தெளிந்து சுத்தமாக இருந்தது.
ஒரு பானையில் தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் கொடுத்தார்.

தண்ணீரை பார்த்த புத்தர், ”நீ என்ன செய்து தண்ணீரை தூய்மைப்படுத்தினாய்?
எதுவும் செய்யவில்லை. அந்த தண்ணீரை அப்படியே விட்டு விட்டாய்.
சேறும் சகதியாய் இருந்த தண்ணீர் தெளிந்த நீராய் ஆனது”.

“உன் மனமும் அதை போல தான். அது துன்பத்தில் இருக்கும் போதும், கோபமாய் இருக்கும் போதும்,
அதை சிறிது நேரம் அப்படியே விட்டு விடு. மனம் தானாய் அமைதியாய் விடும்.
அதை அமைதிப்படுத்த நீ எந்த முயற்சியையும் எடுக்க தேவையில்லை.
அது தானாகவே அமைதி ஆகி விடும்” என்று அந்த சீடரிடம் புத்தர் கூறினார்.

புத்தர் மன அமைதியை பற்றி எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்.
அவர் சொல்வது மிகவும் எளிமையான யோசனை. ஆனால் அதை செய்வது பல பேருக்கு கடினமான செயலாய் இருக்கிறது.
ஏனென்றால் மனம் கவலையில் இருக்கும் போது தான், எண்ணங்கள் அதிக அளவில் ஊடுறுவிகிறது.
நாம் யோசித்துக் கொண்டே இருக்கிறோம். மனம் அமைதி அடைவதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று ஒருவரிடம் சொன்னால்,
அவருக்கு ஒரே போர் அடிக்கிறது. எதையோ இழந்தது போல் இருக்கிறது.
ஒருவன் சில மணி நேரங்கள் எதையும் செய்யாமல் சும்மா இருக்க பழக வேண்டும்.
அதை பழகிக் கொண்டால், புத்தர் சொன்னது சுலபமான வழி தான் என்று புரியும்.

முன்பெல்லாம் வாரம் ஒரு நாள் முழுக்க போன், கம்யுட்டர், டிவி இல்லாமல், யாரிடமும் பேசாமல் நான் அமைதியாக தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன்.
இப்போது நேரம் கிடைப்பதில்லை. வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் சும்மா இருக்கிறேன்.
நீங்களும் சும்மா இருக்க முயற்சி பண்ணி பாருங்க. சும்மாவே இருக்க கூடாதுனு சொல்வாங்க.
அது தவறான கருத்து. கொஞ்ச நேரமாவது சும்மா இருக்கனும்.
அதாவது போன், கம்யுட்டர், டிவி இல்லாமல் தனிமையில் சும்மா இருக்கனும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot