Sunday, March 19, 2017

இளையராஜாவை ஏமாற்றிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சனிக்கிழமை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்:

சில நாட்களுக்கு முன் இளையராஜாவின் வக்கீல் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இளையராஜாவின் அனுமதி இன்றி அவரது பாடல்களை இசை கச்சேரியில் பாட கூடாது.
அதை மீறி பாடினால், அது காப்புரிமை சட்டத்தை மீறுவதாய் அமைந்து விடும்,
பெரிய தொகையை அபராதமாக கட்ட நேரிடும், வழக்கையும் சந்திக்க வேண்டும் என்று
அந்த நோட்டிசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் 50 வருடமாக பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறேன். அதை கொண்டாடும் வகையில் எனது மகன் SPB50 என்ற பெயரில்
உலகம் முழுக்க இசை கச்சேரி ஏற்பாடு செய்தார்.

ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் இதை தொடங்கினோம். அதன் பின் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் ஆகிய
நாடுகளில் கச்சேரியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜவிடம் இருந்து எனக்கு எந்த ஆட்சேபனையும் வரவில்லை.
ஏன் இப்போது இளையராஜா இப்படி செய்தார் என்று தெரியவில்லை.

எனக்கு காப்புரிமை சட்டம் பற்றி எல்லாம் தெரியாது. நான் சட்டத்தை மதிப்பவன்.
இனி என் கச்சேரிகளில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பாடமாட்டேன்.  கச்சேரி நடந்தாக வேண்டும்.
கடவுள் அருளால் நான் பிற இசை அமைப்பாளர்களுக்கும் நிறைய பாடல்களை பாடியுள்ளேன்.
அதை நான் பாடுவேன். என்றும் போல் உங்களின் ஆதரவு எனக்கு தேவை. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

என் நண்பன் இளையராஜாவிற்கு மன வருத்தத்தை தர வேண்டும் என்பது என் நோக்கமில்லை.
இளையராஜா பாடல்களை எதிர்ப்பார்த்து வந்து நீங்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக தான் நான் இதை உங்களிடம் கூறினேன்.
நண்பர்களே இந்த விசயத்தை தயவு செய்து பெரிய விவாதமாக மாற்ற வேண்டாம்.

இந்த செய்தி எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது.
50 வருட நட்புக்கு காப்புரிமை பிரச்சனையால் விரிசல் விழும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

காப்புரிமை சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா சொல்லியது இது தான் முதல் முறையா?
இல்லை. 2014 ஆம் ஆண்டில் 5 இசை நிறுவனங்கள் தன் அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை விற்பனை செய்கிறார்கள்.
அதை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அதில் வென்றும் இருக்கிறார்.
தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் தன் அனுமதி இல்லாமல் தன் பாடல்களை பயன்படுத்த கூடாது
என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.

”காப்புரிமை சட்டத்தின் படி ஒரு பாடலின் காப்புரிமை பாடலின் இசை அமைப்பாளரிடமே இருக்கிறது.
இளையராஜா ராயல்டி கேட்பது சட்டப்படி சரி தான்.” என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் என்ன சொல்றார் என்று பார்ப்போம்.
“மக்கள் இந்த விவகாரத்தை தவறாய் புரிந்து கொண்டார்கள். தன்னுடைய பாடல்களை பயன்படுத்த வேண்டும்
என்றால் ராயல்டி பணம் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை
பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். வக்கீல் நோட்டிஸ் அனுப்ப வேண்டிய சூழ்நிலையை SPB
தான் உருவாக்கினார்.

இளையராஜா 35 வருட வாழ்க்கையை இசைக்காக அற்பணித்தார்.
ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி தொகை அவருக்கு கிடைக்கவில்லை.
கல்யாணத்தில் இசை கச்சேரி செய்பவர்கள் மற்றும் சிறு இசை கலைஞர்கள் ஆகியோரிடம் நாங்கள் ராயல்டி பணம் கேட்டு வற்புறுத்தவில்லை.
ஏனென்றால் இளையராஜாவின் பாடல்கள் தான் அவர்களுக்கு வாழ்வாதாரமாய் இருக்கிறது

ஆனால், அவரின் பாடல்களை பயன்படுத்தி கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பவர்களிடம் மட்டும் தான் ராயல்டி பணம் கேட்கிறோம்.
தான தர்மாம் செய்வதற்காக SPB இசை கச்சேரியின் மூலம் பணம் சம்பாதிக்கவில்லை.
அவர் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஆனால் இசை அமைப்பாளருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

இளையராஜா spb யின் நண்பர் தான். இசை கச்சேரியை தொடங்குவதற்கு முன் அவரிடம் பேசி அனுமதி பெற்று இருக்கலாமே.
ஆனால் spb அதை செய்யவில்லை.

இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கறாராக சொல்வதில்லை. உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுங்கள் என்று
தானே சொல்கிறோம் ஆனால் ஒரு ரூபாய் கொடுப்பதற்கு கூட யாருக்கும் விருப்பமில்லை.
என்று இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் கூறினார்.

”don't take anything for granted" என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வாக்கியம்.

50 வருடம் நண்பர்களாய் இருந்தால் கூட, பேசி அனுமதி பெறுவது தான் நட்பிற்கு அழகு.
SPB இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்பது தவறு தான். எனினும், இளையராஜா தன் நண்பனிடம் நேரடியாக பேசி இந்த பிரச்சனையை தீர்த்தி இருக்கலாம்.
வக்கீல் நோட்டிஸ் அனுப்பி பெரிய பிரச்சனை ஆக்கி இருக்க வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

இளையராஜா மற்றவர்களின் சொத்துக்களக்கா உரிமை கோரினார்.
தன்னுடைய பாடல்களுக்கு தான உரிமை கோரினார்.
தன்னுடைய உழைப்பிற்கு ஒருவர் ஊதியம் எதிர்ப்பார்ப்பது தவறு இல்லையே.
இளையராஜா என்பவர் தனி மனிதனும் இல்லையே. அவரின் பாடல்கள் இப்போது அவருடைய குடும்பத்தின் சொத்துகளாய் இருக்கிறது.
அந்த சொத்தை அவர்கள் எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும் என்று இளையராஜா ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

பணம் என்று வந்து விட்டால் 50 வருட நட்பையும் ஒரு நொடியில் மக்கள் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
இது இளையராஜா பாலசுப்ரமணியத்தின் பிரசசனை மட்டும் அல்ல.

பொதுவாகவே பணம் மனிதர்களை மாற்றி விட்டது.
அன்பால் இணைந்திருந்த மனித சமுதாயம், இன்று பணத்தால் பிளவு பட்டிருப்பது வேதனையான விஷயம் தான்.
மனதளவில் மனிதர்களுக்கு மிக பெரிய புரட்சி ஏற்பட வேண்டும்.
அன்பே பிரதானம் என்ற நிலை மீண்டும் வர வேண்டும்.
பேராசை, பொறாமை குணங்கள் மனிதரகளிடம் இருந்து விலகி செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot