Thursday, December 1, 2016

IT guys - நச்சுன்னு நாலு கேள்வி பாமரனிடம் இருந்து

ஒரு சாமன்யனின் கருத்தை கேட்போம்.
தயவு செய்து உங்கள் பொன்னான சில நிமிடத்தை செலவழித்து கேளுங்கள்.

நான் வீட்டு வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளம்.
என் வீட்டுக்கார் ஹோட்டல்ல எடுபிடி வேலை பாக்கறார். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம்.
எங்கள் இருவரின் சம்பளத்தை சேர்த்தாலும் வருமான வரி உச்சவரம்பான 2.5 லட்சம் ரூபாயை தொடவில்லை.
நாங்கள் நாட்டை ஏமாற்றி வரி ஏய்க்க வில்லை.
எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளின் படிப்பு செலவிற்காக இதுவரை சிறுக சிறுக நாங்கள் 4 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருக்கோம்.
நாங்கள் இருவரும் தினமும் வேலைக்கு செல்கிறோம். வங்கிக்கு சென்று பணத்தை டெபாசிட் செய்வதற்கு நேரம் இல்லை.
அதனால் பணத்தை வீட்டில் தான் வைச்சிருக்கோம்.
நீங்க 500,1000 ரூபாய் செல்லாதுனு சொல்லிட்டீங்க. கறுப்பு பணம், கள்ள பணம்னு என்ன என்னமோ சொல்றீங்க.
எங்களுக்கு ஒன்னுமே புரியலை சாமி. நாங்க படிக்காத ஜனம்.

2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், வருமானத்துக்கு கணக்கு காட்டனுமாம்?
இல்லைனா வரி கட்டனுமாம்.
எங்க முதலாளி சம்பளத்தை கையில தான் கொடுப்பார். வேலை கிடைச்சாலே பெரிய விஷயம்.
அதுல எனக்கு ரசீது கொடுங்கனு எங்களால் கேக்க முடியுமா. ஏழை ஜனங்க சாமி நாங்க. எங்களால் எதுவும் கேட்க முடியாது.

என் கிட்டே என்ன ஆதாரம் இருக்கு. இப்ப என் பணம் கறுப்பு பணம்னு சொல்றாங்க
62500 ரூபாய் வரி கட்டனுமாம். 62500 ரூபாயை நாலு வருசம் கழித்து தான் தருவாங்களாம். என்னங்க ஐயா நியாயம் இது.
நாங்க பத்து வருசமாய் நியாயமா சேர்த்த காசை புடுங்கறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?
கல்யாணம் பண்ணிட்டு, குடும்பம் செய்ய முடியாம, பொண்டாட்டியை தனியா தவிக்க விட்ட உஙக்ளுக்கு
குடும்ப கஷ்டத்தை பற்றி என்ன தெரியும்? எங்களோட மகளின் வாழ்கையை நாசப்படுத்திறீங்களே.
ஒரு பொன்னு உங்களுக்கு இருந்தா அந்த அருமை தெரியும். உங்க பொண்டாட்டி புள்ளையோட வாழ்ந்திருந்தா,
திட்டம் போடறதுக்கு முன்னாடி குடும்பங்களுக்கு என்ன பாதிப்பு வரும்னு யோச்சிருப்பீங்க.
நாங்க செஞ்ச பாவம். எங்க முதலமைச்சருக்கும் குடும்பம் இல்லை. நீங்க கல்யாணம் ஆனாலும் தனிக்கட்டை.

எனக்கு உடல்நல கோளாறு என்றால், காசு கொடுத்தால் தானே அரசாங்க ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை.
காசு கொடுத்தால் தானே, என் குழந்தைகளை நான் படிக்க வைக்க முடியும்.
அரசாங்க ஸ்கூல், ஆஸ்பத்திரி நல்லாவே இல்லை.
வரி கட்டினாலும் கோடி கணக்கில் திருடி சாப்டுறாங்க அரசியல்வாதிகள். நான் ஏன் வரி கட்டனும்?
எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செஞ்சுது?

மோடி ஐயா, எங்களை மாதிரி பல பேரோட சாபம் உங்களை நோக்கி வந்துட்டு இருக்கு.
நாங்க ஏமாந்த ஜனம். விதியில் இறங்கி போராடாவா முடியும்.
நாங்க ஒரு நாள் கூட வேலையில இருந்து நிக்க முடியாது. உழைச்சிக்கிட்டே இருக்கனும்.
அந்த தைரியத்தில் தான, நீங்க இந்த மாதிரி உறுப்படாத சட்டம் போடறீங்க.

எங்க ஊர் கலைஞர் திருட்டு ரயில் ஏறி வந்தவர்.
எங்க ஊர் அம்மா, சினிமா நடிகை, அப்புறம் 1 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குற முதலமைச்சர்.
இன்னிகு பல லட்சம் கோடி சொத்து வச்சிருக்காறாம். அவர் கிட்டே ஒரு ரூபாயாவது உங்களால் எடுக்க முடியுமா?
அரசியல்வாதிகள் உங்க சொந்தகாரங்க. கையை வைப்பீங்களா? உங்களால முடியாது.
நாங்க ஏமாந்த ஜனம். எங்க மேல் ஏறி மிதிக்கிறிங்க.
ஆடுங்க ஐயா, எவ்வளவு முடியுமா ஆடுங்க. கடவுளோட பொறுமைக்கும் எல்லை உண்டு.
நன்றி மோடி ஐயா.


மோடி எது செஞ்சாலும் எதை பற்றியும் யோசிக்காமல் ஆதரிக்கும் படித்து விட்டு நன்றாக சம்பளம் வாங்கும் மக்களே, உங்களுக்கு சில கருத்துகளை
சொல்ல விரும்புகிறேன்.

கம்யுட்டர் வேலை பாக்கற அம்மா வீட்டில வேலை பாக்கறேன்.
உங்களோட லட்சணம் எனக்கு நல்லாவே தெரியும்.

நீங்க மட்டும் தான் வரி கட்டுறீங்கனு பீத்திகிறீங்களே.
உங்களின் நிறுவனம் உங்களுக்கு வருமான வரி பிடித்து கொண்டு, மீதி காசை சம்பளமாய் கொடுக்கிறார்கள்.
அதிலும், திருட்டு மெடிக்கல் பில் போன்றவைகளை வைத்து முடிந்த வரை பணம் பெறுகிறீர்கள்.
லோன் வாங்குவது, இன்சுரன்ஸ் எடுப்பது போன்றைவகளையும் பயன்படுத்தி முடிந்த வரை உங்கள் வருமான வரியை குறைக்கிறீர்கள்.
எங்களை தேசபக்தி அற்றவர்கள் என்று சொல்கிறீர்களே? வருமான வரியை குறைக்க என்னென்ன செய்யனுமா, எல்லாத்தையும் செய்கிறீர்களே.
நீங்கள் தேசநலன் பற்றி சிந்திப்பவர்களா?

ஒரு வேளை உங்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு, நீங்களே வரி கட்டுங்கள் என்று சொன்னால், நீங்கள் கட்டி இருப்பீர்களா
என்று மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்?

நீங்க சென்னையில குவிய தொடங்கியவுடன், சென்னை விலைவாசியே ஜாஸ்தியாச்சே.
வீட்டு வாடகை ஜாஸ்தியாச்சே. எங்களை போன்றோர் வீடு வாங்க நினைக்க முடியாத அளவுக்கு போனதே.
சென்னையி குடியிருக்க வாடகை கட்ட முடியாமல், நகரத்திற்கு வெளியே செல்ல வேண்டி போனதே.
அதுக்கு நீங்க தான காரணம்? காசு சம்பாதிக்கறது தப்பில்லை. அத வச்சிக்கிட்டு நீங்க பண்ற அலம்பல் இருக்கே. அப்பப்பா...
ஆட்டோகாரனுக்கு டிப்ஸ், ஹோட்டல்காரனுக்கு டிப்ஸ், கார், வீடு, சொத்து சுகம் நு ஆடுனீங்களே.
உங்க வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் பல ஏழை குடும்பம் இருந்துச்சு. யாராவது ஒரு குழந்தையை படிக்க வைக்கனும்.
யாராவது ஒருவருக்கு ஏதாவது கடை வைத்து கொடுத்து அவர்கள் வாழ்கையை முன்னேற்றனும் நு நினைச்சீங்களா.
இல்லையே. ஈவு இறக்கம் இல்லாம தான் இருக்கீங்க. ஒரு மனுசனுக்கு தங்க எத்தனை வீடு தான் வேணும்.
நீங்க பாட்டு வாங்கிக்கிட்டே இருப்பீங்க.

அன்னிக்கும் நீங்க எங்களை பற்றி கவலைப்படலை.
இன்னிக்கும் நீங்க எங்களை பற்றி கவலைப்படலை.


500,1000 ரூபாய் காசு செல்லாம, எவ்வளவு கஷ்ட படறோம்.
எங்களுள் நிறைய பேருக்கு வேலை போச்சு. எங்க வேலையும் இன்னும் எத்தனை நாளுனு தெரியலை.
இருக்குற 500,1000 த்தை மாத்த வங்கிக்கு போய் நாள் முழுக்க நிக்கவா, அல்லது வேலைக்கு போகவா?
என்ன தான் நாங்க செய்யறது?
எங்களின் வாழ்க்கையை கெடுத்தது அரசியல்வாதிகள் மட்டும் அல்ல. உங்களை போன்ற சுய நலவாதிகள்ம் தான்.

இன்னிக்கு இந்த திட்டம் சிறந்த திட்டம். எல்லாம் விரைவில் சரி ஆகிடும்னு சொல்றீங்களே.
சரியாகற வரைக்கும் எங்க குடும்ப செலவை நீங்க ஏத்துக்கிறீங்களா?
எங்க பிள்ளைகளுக்கு நீங்க பீஸ் கட்டுறீங்களா?

கடவுள் இருக்கான் என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் என்றுமே இதே நிலைமையில் தான் இருப்பீர்களா?
ஏழைகள் ஆக மாட்டீர்களா? நாங்கள் ஏழையாய் இருந்து ஏமாந்து பழகிவிட்டோம்.
உங்களுக்கு அதன் வலி தெரியுமா. உங்களுக்கு வந்தால் தான் புரியுமா?
யாருக்கும் சாபம் விடும் கெட்டவர்கள் அல்ல நாங்கள்.
உங்களுக்கு புரிய வைக்கவே முயற்சிக்கிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot