Thursday, December 15, 2016

பாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்

இதுவரை பல முறை தந்தி டிவி ஜெயலலிதா உடல்நலம் பற்றி அதிகாரபூற்வமற்ற செய்திகளை வெளியிட்டார்கள்.
அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் வதந்தி.
அவர்கள் பரப்பிய வதந்திகளை பார்க்கலாம் வாருங்கள்.

செப்டம்பர் 23:
முதலமைச்சர் நலமாக இருக்கிறார். இன்று மாலை முதலமைச்சர் வீடு திரும்புவார்.

ஆக்டோபர் 10:
முதலமைச்சர் கண்கள் திறந்து சில வார்த்தை பேசினார்.

ஆக்டோபர் 11:
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்:10 நாட்களில் வீடு திரும்புவார்.

ஆக்டோபர் 13:
பிரதமர் நரேந்திர மோடி ஆக்டோபர் 15ந் தேதி அப்பல்லோ வந்து ஜெயலலித உடல்நலம் குறித்து விசாரிப்பார்.

ஆக்டோபர் 21:
உடல்நிலை சரி ஆகி வீடு திரும்ப 2 மாதம் வரை ஆகும்.

ஆக்டோபர் 31:
முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அடுத்த வாரம்
எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற அறைக்கு மாற்றப்படுவார்.

நவம்பர் 10:
நவம்பர் இறுதிக்குள், ஆதாவது இன்னும் 20 நாட்களுக்குள் வீடு திரும்புவார்.

நவம்பர் 10க்கு பிறகு ரூபாய் நோட்டு மாற்றும் திட்டம் வந்ததால், மக்கள் கவனம் அங்கு திரும்பியது.
சி.ஆர்.சரஸ்வதி மற்றும் பொன்னையன் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஜெயலலிதா உடல்நலம் குறித்து பேசியதை
இவர்கள் ஒளிப்பரப்பினார்கள்.அவர்கள் சொல்லியது “முதலமைச்சர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்”

டிசம்பர் 5:
மாலை 5:30 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டதாக பாண்டே கூறினார்.

ஆக்டோபர் மாதம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ஆனால் இத்தனை வதந்திகள் பரப்பிய தந்தி டிவி மீது ஏன் தமிழக அரசு வழக்கு போடவில்லை?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இறந்து விட்டார் என்று உச்சக்கட்ட வதந்தியை தந்தி டிவி பரப்பியது.
ஏன் இதுவரை தமிழக அரசோ, காவல்துறையோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
சட்டங்கள் என்றுமே பாமரர்களுக்கு தானா?
உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு சட்டங்கள் செல்லாதா?

பாண்டேயை விசாரித்தாலே ஜெயலலிதா மரணத்தின் மர்மங்கள் எல்லாமே வெளிவரும்.
அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக இத்தனை வதந்திகளையும் பரப்பினார்.
யார் அந்த வட்டாரம் என்று விசாரித்தால் உண்மை வெளிவரும்.
ஜெயலலிதா இறந்து விட்டார் என்ற தகவல் எப்படி அவருக்கு தெரிந்தது? யார் அவரை சொல்ல சொன்னது?
இவர் அறிவித்து சில நிமிடங்களில், அப்பல்லோ மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சொன்னார்கள்.
இந்த சம்பத்திற்கு என்ன பின்னணி? இருப்பவர்கள் யார்?
பாண்டேயின் தொலைபேசி உரையாடல், இமெயில் ஆகியவற்றை சோதனை செய்தால், இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

ஆனால், யார் தந்தி டிவியை விசாரிப்பார்கள்?
உள்ளுர் போலீசும், மத்திய அரசின் சிபிஐம் இதை விசாரிக்க மாட்டார்கள்.
அப்புறம், உண்மை எப்படி வெளிவரும் என்று தெரியவில்லை.
ஜெயலலிதா இறந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று தான் இரண்டு கட்சிகள் ஜெயலலிதா மரணம் பற்றி வாய் திறந்திருக்கிறார்கள்.
ஸ்டாலினும், ராமதாசும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை
தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் நாம் எல்லாரும் கேட்ட கேள்விகளும், ஏன் எந்த கட்சியும் வாய் திறக்கவில்லை என்று வைத்த
விமர்சனங்களும் தான் இவர்களை வாய் திறக்க வைத்திருக்கிறது.
நம் கையில் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் யாரும் பலவீனமானவர்கள் இல்லை.
நம்முடைய கேள்விகள் இவர்கள் காதுகளில் சென்றடைகிறது. நாம் எல்லாரும் தொடர்ந்து பணி செய்வோம்.

பாண்டே அவர்களே உங்களுக்காக சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்.
நான்கு வருடங்களுக்கு முன்னர், தந்தி டிவி தொடங்கிய போது உங்கள் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம்  வந்தது.
ஆனால் நாளடைவில் அது மாறியது. சமீபத்தில், நீங்கள் நடுநிலை தவறுவது அனைவருக்குமே தெள்ள தெளிவாக தெரிந்தது.

ஊடகம் என்பது ஒரு புனிதமான தொழில். அது ஒரு மக்கள் சேவை.
விலை போன உங்களால் மக்களை ஏமாற்ற முடியும்.
ஆனால், உங்கள் மனசாட்சியை ஏமாற்ற முடியுமா?
அது கேள்வி கேட்டு கேள்வி கேட்டு உங்கள் நிம்மதியை கெடுக்கதா?
புனிதமான ஊடக தொழிலை, தவறாக பயன்படுத்துகிறோமே என்று உங்கள் மனசாட்சி உங்களை கேட்குமே?
உங்களால் நிம்மதியாக தூங்க முடியுமா?

அதிகார வர்க்கத்துக்கு அடி பணிந்து, நடுநிலை தவறி, கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
பணம் குவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா? மனதில் நிம்மதி இருக்க வேண்டாமா?
வயதான காலத்தில், தவறு இழைத்து விட்டோமே என்று மனம் தவியாய் தவிக்குமே.

அப்படியோரு நிலை யாருக்கும் வரக்கூடாது.
யாருக்கும் பயப்படாமல், நேர்மையாய் தலைநிமிர்ந்து வாழ்ந்தேன் என்ற கர்வம் இருக்க வேண்டாமா?
மூன்று வேளை சாப்பாடு, தங்க இடம், ஊடுக்க உடை அவ்வளவு தானே. அதற்கு எதுக்கு இப்படி ஒரு நேர்மையற்ற,
அடிமை வாழ்க்கை. சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டாமா?

பாமர மக்கள் நாங்கள் நேர்மையாய் சம்பாதிக்கிறோம். எங்களால் நிம்மதியாக தூங்க முடியும்.
நாங்கள் நேர்மையானவர்கள் என்ற கர்வமும், பெருமையும் எங்களுக்கு இருக்கிறது.
தன்மானத்தை இழக்காமல் தலை நிமிர்ந்து வாழ்கிறோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கிறது.
உங்களின் சாயம் வெளுத்து விட்டது பாண்டே. தந்தி நிறுவனம், உங்களை நடுநிலையாய் செயல்பட அனுமதிக்கவில்லை
என்றால், எதற்காக அதில் இருக்கனும்? வேலையை தூக்கி எரிந்தால், எதை இழக்க போகிறீர்கள்?
எதை இழந்தாலும், உங்களின் தன்மானத்தை திரும்ப பெறுவீர்களே.
எஞ்சிய வாழ்க்கையை அந்த தன்மானம் காப்பாற்றுமே.

சமீபத்தில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் லஷ்மி ராமகிருஷ்ணனை வறுத்து எடுத்து விட்டீர்கள்.
அது தொடர்பாக சில கேள்விகள்.

1) ஆக்டோபர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். மரணத்தில் மர்மம் என்று அனைவரும் விவாதிக்கிறார்கள்.
இப்போது ஏன் லஷிமி ராமகிருஷ்ணனை பேட்டி எடுத்தீர்கள். ஏன் இந்த திசைதிருப்பும் டிராமா?

2)
நீங்கள் அவரை கேட்கிறீர்கள், “இத்தனை வருடங்களாக நீங்கள் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள்.
ஊரில் குடிகாரர்கள் குறைந்தார்களா? கள்ளக்காதல், பாலியல் குற்றங்கள் குறைந்ததா? 500 டாஸ்மாக் கடைகள்
மூடின பிறகும், அதன் விற்பனை குறையவில்லையே” என்று கேட்கிறீர்கள்.

நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். “நீங்கள் நான்கு வருடமாய் தந்தி டிவியில் இருக்கிறீர்கள்.
ஆயுத எழுத்து, கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளை மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறீர்கள்.
அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தானே நோக்கம்.
அது நடந்ததா? ஊழல் குறைந்ததா? தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குறாங்க.
டிராபிக் போலிஸ் லஞ்சம் வாங்குறாங்க. எல்லா அரசாங்க அலுவலகஙகளில் இன்னமும் வெளிப்படையாக லஞ்சம் வாங்குகிறார்களே.
நிர்வாக சீர்கேடினால், தமிழகத்தின் கடன்சுமை நாளுக்கு நாள் அதிகமாகிறதே. உங்களின் நோக்கம் நிறைவேறவில்லையே. தந்தி டிவியை மூடி விடுகிறீர்களா?”

ஊடகம் என்பது புனிதமான ஒரு தொழில். உங்களுக்கு திறமை இருக்கிறது. பல கோடி மக்களுக்கு உங்களை தெரியும்.
ஏன் எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழ கூடாது.
a) அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை மறைவாக வீடியோ எடுத்து தொடர்ந்து ஒளிப்பர்ப்புங்கள்.
b) டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவதை படமெடுத்து ஒளிப்பரப்புங்கள்.
c) விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? ஏன் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது?
   அரசியல்வாதிகள் எப்படி அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பதை பற்றி பேசுங்கள்.
c) கேசட் கடை நடத்திய சசிகலாவிடம் இன்று எப்படி பல லட்சம் கோடி ரூபாய் சொத்து வந்தது என்பதை புலனாய்வு
   செய்து கண்டறிந்து அதை ஒளிப்பரப்புங்கள்.
d) 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தால் தமிழகத்தில் கிராமங்களில் எவ்வளவு
   பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை படமாக்கி ஒளிப்பரப்புங்கள்.
e) குடி, குடியை எடுக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க குடியால் அழிந்த குடும்பங்களை பற்றி தொடர்ந்து பேசுங்கள்.
f) தமிழகத்தில் எந்த எந்த கிராமங்களில் இன்றும் மின்சாரமும், குடிதண்ணீர் இல்லாமலும் சிரமப்படுகிறார்கள்.
   அங்கெல்லாம் உங்கள் கேமராக்களை திருப்புங்கள்.
g) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் விவரஙகளை பேசுங்கள்
    குற்றங்கள் செய்து சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேட்டி எடுங்கள். செய்த தவறினால் அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழ்ந்தது என்பதை
   மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் செய்தால் நீங்கள் உண்மையான ஊடகவாதி என்ற போற்றப்படுவீர்கள்.
உங்களுக்குள் ஒரு திருப்தி, மன நிறைவு, மன அமைதி ஏற்படும்.
மக்கள் வாழ்க்கை மேன்படும்.

பாண்டே அவர்களே, மீதமுள்ள வாழ்க்கையில் ஊடக தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தாமல் நேர்மையாய் வாழ முயற்சியுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot