Monday, December 19, 2016

மோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்

https://rbi.org.in/Scripts/NotificationUser.aspx?ID=10784
திடுக்கிடும் இன்னொரு மாற்றம்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பீதி அடைய வேண்டாம்.
1) பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் பணம் உங்களுடையது தான் என்றார் பிரதமர்
  டிசம்பர் 31 வரை காலம் இருக்கிறது. பொறுமையாக பழைய பணத்தை டிபாசிட் செய்வதோ, அல்லது மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என்றார்.

இதில் தினம் தனம் புதுப்புது அறிவிப்புகள் வந்தவாறு உள்ளது.
இன்று என்ன தெரியுமா?

இன்று முதல் 5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி அதிகாரிகள் இரண்டு பேர் நம்மை விசாரிப்பார்கள்.
ஏன் இவ்வளவு தாமதாக பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லனுமாம். பணம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டுமாம்.
அதிகாரிகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அந்த பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
என்ன அர்த்தம்? அந்த பணம் வீணாய் போகும்? அதிகாரிகள் அதை வாங்கி கொள்வார்கள். ஆனால், நம் வங்கி கணக்கில் வரவு வைக்க மாட்டார்கள்.

5000 ரூபாய்க்கு மேல் பல முறை டெபாசிட் செய்தாலும், அந்த வங்கி கணக்கில் இன்றிலிறுந்து டிசம்பர் 31 வரை டெபாசிட்
ஆகும் தொகை 5000 மேல் இருந்தால், வங்கி அதிகாரிகள் நம்மை மேற் சொன்ன கேள்விகளை கேட்பார்கள்.

ஏழைகளின் வங்கி கணக்கில் பணக்காரர்கள் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். அதை தடுப்பதற்காக தான் இந்த கட்டுப்பாடு
என்கிறார்கள். ஆனால் உண்மையான நோக்கம் அதுவா?

இந்தியாவில் அதிகமாக இருப்பது அரசு வங்கிகள். அதிக மக்கள் அரசு வங்கிகளில் தான் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ரிசர்வ் வங்கி அதிக பணத்தை ஏன் தனியார் வங்கிகளுக்கு அனுப்பினார்கள்?
axis bank மற்றும் இதர தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கி அதிகாரிகள் உதவியுடன் கறுப்பு பண முதலைகள் மாற்றி இருக்கிறார்களே?
அரசாங்கம் இதை திட்டமிட்டு செய்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறதே?
நடவடிக்கை எடுக்கிறோம் என்று காட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதை திசை திருப்புவதற்கு, மறுபடியும் பாமர மக்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சில கருத்துகளை நான் சொல்ல விரும்புகிறேன்.
1) டிசம்பர் 31 வரை நேரம் கொடுத்தார்கள். அவசரப் படாதீர்கள். உங்கள் பணம் உங்களுக்கு தான் என்று சொன்னார்கள்.
ஆனால் 12 நாளைக்கு முன்னரே, ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்று அதிகாரிகள் நம்மை கேட்பார்களாம்?

2) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம், யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்றார்கள்.
   2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி கட்ட வேண்டும் என்றார்கள். ஆனால், இப்போது 5 ஆயிரம் ரூபாய் மேல் கட்டினாலே, கேள்வி கேட்பார்கள் என்கிறார்கள்.

3) குடும்ப பெண்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் சேமித்த பணத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்
  என்றார்கள். ஆனால் தடாலடியாக 5000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால், ஆவணங்கள் வேண்டும் என்கிறார்கள். வாக்குறுதியை தூக்கி எறிந்து விட்டார்கள்.

4) இந்தியாவின் 80 சதவீத மக்கள் முறைசாராத தொழில்களில்(informal sector) வேலை செய்கிறார்கள்.
அவர்களுக்கு சம்பளம் பணமாக தான் கொடுக்கப்படும். அவர்களுக்கு வருமான சான்றிதழ் தர மாட்டார்கள்.
அவர்கள் எந்த ஆதாரத்தை காட்டி 5 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்வார்கள். உங்கள் பணம் உங்களுக்கே என்று சொன்னார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் பணம் அவர்களுக்கு இல்லை என்று நிலை வந்து விட்டதே.

5) நவம்பர் 8ம் தேதி அறிவிப்பு வந்த போது, 2.5 லட்சத்திற்கு மேல் டிபாசிட் செய்தால், வரியும் 200 சதவீத அபராதமும் விதிக்கப்ப்படும் என்றார்கள்.
  நவம்பர் 19ம் தேதி கறுப்பு பண முதலைக்கு ஆதரவாகவும், பாமரர்களுக்கு எதிராகவும் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார்கள்.
  2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் 50% வரி விதிக்கப்படும் என்றார்கள். கறுப்பு பண முதலைகள் வெளியில் 30 சதவீதம் கொடுத்து
  சிரமப்பட்டு பணத்தை வெள்ளையாக்க வேண்டாம். எங்களிடம் 50% சதவீதம் கொடுங்கள். நாங்களே வெள்ளை ஆக்கி தருகிறோம் என்பது போல் அந்த
  அறிவிப்பு இருந்ததது. ஆனால் கணக்கு கொடுக்க முடியாத பல வருட சேமிப்பு பணத்தை வைத்திருந்தவர்களின் தலையில் இடியாய் விழுந்தது.
  கறுப்பு பண முதலைகளுக்கு 20 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகு, 19 டிசம்பர் அன்று இன்னொரு மாற்றத்தை நேற்று கொண்டு வந்திருக்கிறார்கள்.
  5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால், ஆவணங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் டெபாசிட் செய்ய இயலாது என்று சொன்னார்கள்.
  இது பாமரர்களை கடுமையாக பாதிக்கிறது.

இதற்கு முன்னர் 50 சதவீத வரி கட்டினால், மீதி கொஞ்ச பணமாவது மிஞ்சும் என்ற நிலை இருந்தது.
இப்போது அதுவும் இல்லை என்று ஆகி விட்டது. வெளிநாட்டு கறுப்பு பணத்தை மீட்க வில்லை, லஞ்சத்தை ஒழிக்கும்
லோக்பாலை கொண்டு வரவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கடுமையான தண்டனை என எந்த
சட்ட திருத்தமும் கொண்டு வரவில்லை. 1% பணக்காரர்கள் இந்தியாவின் 60% வளங்களை வைத்துள்ளார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை
பாயவில்லை. அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? மக்கள் மீது ஏன் இப்படி ஒரு தாக்குதல் நடத்துகிறார்கள்?

புழக்கத்தில் இருந்த பழைய 500,1000 ரூபாயின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய்.
இதுவரை 13 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்து விட்டது.
இன்னும் இரண்டு வாரத்தில் மீதி பணம் வந்து சேர்ந்து விடும் என்ரு பொருளாதார வல்லுனர்கள் கணித்தார்கள்.
அப்படி எல்லா பணமும் வந்து சேர்ந்து விட்டால், திட்டம் தோல்வி என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.
கறுப்பு பண முதலைகள் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள். பழைய நோட்டுகளை குப்பையில் போட்டார்கள், எரித்தார்கள், கங்கையில்
வீசினார்கள் என்று பிரதமர் சொன்னது வெறும் கதை ஆகி விடும்.
அதை தடுக்கவே, இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

நமக்கு சம்பளம் வங்கிகளில் போட்டு விடுகிறார்கள். நம்முடைய முதலாளி நம் வருமான வரியை பிடித்துக் கொண்டு, அரசுக்கு கட்டு விடுகிறார்.
ஆனால் 80% மக்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை.
அவர்களின் நிலைமை என்ன? அவர்கள் எப்படி துன்பப்படுகிறார்கள் என்று தயவு செய்து ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று பாருங்கள்.

உங்களின் கருத்துகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot