Wednesday, February 8, 2017

பன்னீர் விஸ்வரூபம்!யார் அடுத்த முதல்வர்?

இரவு 9 மணி. ஜெயலலிதா சமாதி முன் பன்னீர் செல்வம் 45 நிமிட தியானம். தமிழக ஊடகங்கள் மட்டுமல்ல, தேசிய ஊடகங்களும்
கவனித்தன. என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் எல்லாரும் காத்திருந்தார்கள்.

மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் அனைத்தையும் விவரித்தார்.
முக்கியமாக தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறினார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை போல் பன்னீரு விஸ்வரூபம் எடுத்தார்.
என்னுடைய கடைசி வீடியோவில், பன்னீர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன மூலம் தான் என்றுமே அடிமை
என்பதை நிருபித்துள்ளார் என்று சொன்னேன். அது பொய்யாய் போனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இனி தமிழக அரசியலில் என்ன நடக்கும்?
யார் ஆட்சி செய்வார். மிகவும் சுருக்கமாக அலசுவோம்.

1)  அதிமுகவிற்கு 136 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை.
   இன்னும் 4 வருடம் திருட வேண்டும் என்பதால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சசிகலா பக்கம் தான் இருப்பார்கள்.
   ஒரு வேளை, ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு கிடைத்தால், சசிகலா முதல்வர் ஆவார்.

2) எத்தனை அதிமுக எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் போவார்கள் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
  குறைந்தப்பட்சம் 20 எம்.எல்.ஏக்கள் பன்னீருக்கு கிடைக்குதுனு வைச்சிக்கலாம்.
  அப்படி இருக்கும் பட்சத்தில் திமுக, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தால் பன்னீர் முதல்வராய் தொடர முடியும்.
  ஆனால், ஸ்டாலின் அவ்வளவு நல்லவரா இருப்பாரானு தெரியலை?
  4 வருசம் பன்னீர் முதல்வராய் இருந்தால் அவர் ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் ஆகி விடுவார்.
  அதை நிச்சய்ம ஸ்டாலின் விரும்ப மாட்டார். வைகோவை கட்சியில் இருந்து அதனால் தானே நீக்கினார்.

3) பன்னீரின் அணி ஒரு வேளை திமுகவிற்கு ஆதரவளித்து ஸ்டாலினை முதல்வராக்கலாம்.
  ஆனால், பன்னீர் ஒரு தீவிர அதிமுக விசுவாசியாய் தான் இன்னமும் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
  அப்படி இருக்கும் பட்சத்தில், அதிமுகவின் பரம எதிரி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்று தெரியவில்லை.

4)
  மேல் சொன்ன மூன்றுமே நடக்கவில்லை என்றால், தொங்கு சட்டசபை தான்.
  அப்படி இருக்கும் பட்சத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். சிறிது காலத்திற்கு பிறகும்
  யாராலும் மெஜாரிட்டியை நிருபிக்க முடியவில்லை என்றால் தேர்தல் நடத்தப்படும்.
  இரட்டை இலை சின்னம் பன்னீருக்கு கிடைக்குமா, சசிகலாவிற்கு கிடைக்குமா அல்லது இரண்டு பேருக்கும்
  கிடைக்காமல் முடங்கி போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நான்கும் இல்லாமல், வேறு ஏதாவது கூட நடக்கலாம். ஏன்னா தமிழக அரசியலில் எதிர்ப்பாராத திருப்பங்கள்
நடக்கிறது. நேற்று இரவு வரைக்கும் பன்னீர் இவ்வளவு தைரியமா பேசுவார்னு யாருமே எதிர்ப்பார்க்கலையே.
சசிகலாவிற்கு எதிரான மக்கள் அலையை ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்வார் என்று கடந்த வீடியோவில் சொல்லியிருந்தேன்.
எதிர்ப்பாராத விதமா பன்னீர் பயன்படுத்திக் கொண்டது மிக பெரிய ஒரு டிவிஸ்ட்.
இது எல்லாமே ஸ்டாலின் சொல்லி தான் செய்றாரா என்பதை இப்போது வரை மறுக்க முடியவில்லை.
எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுனருக்கு அனுப்பி இரண்டு நாள் ஆகிறது. ஆனால் அவர் ஏன் இன்னும்
சசிகலாவிற்கு பதவி பிராமாணம் செய்து வைக்க வரவில்லை என்ற கேள்வியின் மூலம் இதன் பின்னால்
பிஜேபி இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.

திரில்லர் படம் போல் தமிழக அரசியல் சென்று கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot