Thursday, June 22, 2017

ஜூலை முதல் சவுதியில் வாழும் இந்தியர்களுக்கு நெருக்கடி

சவுதி அரேபியாவில் ஜூலை 1ம் தேதி முதல் குடும்ப வரி அமலுக்கு வருகிறது. இதன்படி அங்கு வேலை செய்பவர் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் வரி கட்ட வேண்டும். ஒருவருக்கு மாதம் 100 ரியால் கட்ட வேண்டும். அதாவது, சுமார் 1700 ரூபாய். இந்த வரிக்கு பெயர் குடும்ப வரி.

மனைவிக்கோ, குழந்தைக்கோ விசா விண்ணப்பிக்கும் போதே இந்த வரியை கட்ட வேண்டும். அதுவும் ஒரு வருடத்திற்கான மொத்த வரியை முன் கூட்டியே கட்ட வேண்டும்.

சவுதி அரேபியாவில் கிட்டத்தட்ட 41 லட்சம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். இதில் பலர் குடும்பத்துடன் அங்கு வாழ்கிறார்கள்.

மாதம் குறைந்த பட்சம் 5000 ரியால் சம்பாதிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் குடும்ப விசா வழங்கப்படுகிறது.
அதாவது 86000 ரூபாய். ஒரு குடும்பத்தில் வேலை பார்க்கும் கணவருடன் ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் வாழ்ந்தால்,
அவர்கள் மாதா மாதம் 300 ரியால் குடும்ப வரியாக கட்ட வேண்டும். சுமார் 5100 ரூபாய். ஒரு வருடத்திற்கு முன் கூட்டியே கட்ட வேண்டும் என்பதால் சுமார் 61,200 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.

கிட்டத்தட்ட 6 சதவீத சம்பள பணத்தை குடும்ப வரியாக கட்ட வேண்டும் என்பதால் சில கணவர்கள் தங்கள் குடும்பத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் குடும்ப வரியை கட்டுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால் பல நிறுவனங்கள் ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து தான் இதை கட்ட வேண்டும் என்று சொல்லியிருப்பது வருத்தமான செய்தி.

மேலும் இந்த தொகை 2020 வரை வருடா வருடம் 100 ரியால் அதிகரிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அடுத்த வருடம் ஒருவருக்கு மாதம் 200 ரியால் ஆக அதிகரிக்கும்.
2020 இல் ஒருவருக்கு மாதம் 400 ரியால் கட்ட வேண்டும். மனைவி இரண்டு குழந்தைகளுடன் வாழ்பவர் மாதம் 1200 ரியால் கட்ட வேண்டும். அதாவது மாதம் சுமார் 20,500 ரூபாய் கட்ட வேண்டும்.
ஒரு வருடத்திற்கு முன் கூட்டியே கட்ட வேண்டிய மொத்த தொகை கிட்டத்தட்ட 2.5 லட்சம் ரூபாய்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சவுதி வாழ் இந்தியர்கள் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot