Tuesday, June 13, 2017

பன்னீரின் திடுக்கிடும் முகம் அம்பலம்

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம், தங்கம், மது, மாது என்று  சகலமும் தருகிறார்கள்.

ஆனால் பன்னீர்செல்வம் ரொம்ப நல்லவர். நல்லவர்கள் பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். அவரிடம் வந்த 12 எம்.எல்.ஏக்களும் உத்தமர்கள். பன்னீர் தரப்பில் பணம் எதுவும் தரவில்லை
என்று ஊடகங்களும், பன்னீர் அபிமானிகளும் செய்தியை பரப்பிவிட்டார்கள்.

அப்போதே நான் சொல்லியிருந்தேன். இரு பக்கமும் பேரம் நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் எந்த பக்கத்தில் தங்கள் பேரம் படிந்ததோ அந்த பக்கமே செல்வார்கள் என்று சொல்லியிருந்தேன்.

முதல்முறையாக அது தொடர்பான வீடியோ காட்சியை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டார்கள். அதில் அதிமுக எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூரில் என்ன நடந்தது என்று பேசியிருக்கிறார்.
யார் இருந்த சரவணன். 5 நாட்கள் கூவத்தூரில் இருந்து விட்டு, பின்னர் அங்கிருந்து தப்பித்து ஒடி வந்து பன்னீர் பக்கம் சேர்ந்தவர்.

அவர் என்ன சொன்னார்?
சசிகலா தரப்பினர் முதலில் இரண்டு கோடி தருகிறோம் என்றார்கள். பிறகு நான்கு கோடி என்றார்கள். கூவத்தூரை நெருங்கிய போது 6 கோடி ரூபாய் தருவதாய் சொன்னார்கள்.

தமீம் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் அதிகபட்சமாய் பத்து கோடி ரூபாய் வாங்கியதாகவும் அவர்
சொல்லியிருக்கிறார். இவர்கள் மூவருமே வேற்று கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர்கள்.

சிலருக்கு பணம் கொடுத்தார்கள். சிலருக்கு கொடுக்கவில்லை. பிறகு தங்கம் தருவதாய் சொன்னார்கள். அதையும் எனக்கு தரவில்லை.

மறுபக்கத்தில் பன்னீர் தரப்பினர் கண்டிப்பாக பணம் தருவதாய் சொன்னார்கள். அதை நம்பி தான் பன்னீர் பக்கம் சென்று விட்டேன்.
வாக்களித்தபடி பணம் தராத காரணத்தினால் தான் பிற எம்.எல்.ஏக்களும் பன்னீர் பக்கம் தாவினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதில் நமக்கு இரண்டு விஷயங்கள் புரிகிறது.

1) பன்னீர்செல்வம் உத்தமர் அல்ல. அவரும் பணம் கொடுத்து தான் எம்.எல்.ஏக்களை வாங்கி இருக்கிறார்.

2) டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிஜேபியின் கைப்பாவை என்பது அனைவரும் அறிந்தது. பிஜேபியின் குதிரை பேரங்களை அந்த டிவி என்றைக்கும் ஒளிப்பரப்பியதில்லை. நான்கு மாதங்கள் முன்னர் படமாக்கப்பட்ட வீடியோவை இப்போது ஏன் வெளியிடுகிறார்கள் என்ற கேள்வியும்  எழுகிறது. இதை காரணமாய் சொல்லி ஆட்சியை கலைக்க பிஜேபி திட்டமிடுகிறார்களா என்றும் யோசிக்க வைக்கிறது.

தினகரன் தனக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறதாய் காட்டி விட்டார். என்னை சீண்டாதீர்கள், சீண்டினால் ஆட்சியை கலைப்பேன் என்று பிஜேபியை மிரட்டினார். நீங்க என்ன கலைக்கறாது, ஆட்சியை நாங்களே கலைப்போம் என்று பிஜேபி
தினகரனுக்கு பதிலடி கொடுக்க தான் இந்த வீடியோவை இப்போது ஒளிப்பரப்பி இருக்கிறார்களா?

தினகரன் ஆட்சியை கவிழ்ப்பார் என்பது பிஜேபிக்கு தெரிந்தால், அதற்கு முன் அவர்கள் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.
பிஜேபியின் ஆசியுடன் நடக்கும் ஆட்சியை தினகரன் கவிழ்த்தால், தினகரனிடம் பிஜேபி தோற்று விட்டது என்பது தெரிந்து விடுமே. பிஜேபியின் மானம் போய் விடுமே.

ஒரு சில நாட்களில் நாடகம் எப்படி செல்கிறது என்று தெரியும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot